Monday, November 14, 2011

Sunday, November 13, 2011



 சீதனம் இது அகராதியில் இல்லாத வார்த்தையுமல்ல. புதிதாக மெருகேற்றப்பட்ட சொல்லும் அல்ல. ஆனால் நிரந்தரமானது. எல்லா சமுதாய மட்டத்தின் இதயத்துக்குள்ளும் அடங்கி இதயத்தை அடைக்க வைக்கிற வலிமைமிக்க வார்த்தை.இவ் வையகத்து பெண் வரம் வேண்டிவந்த சமூகத்தின் காதுகளுக்கு நெருப்பை ஊற்றும் சொல் மட்டுமல்ல. பெண்ணுக்கு (பெரும்பாலும்) எதிரியானவள் என்று வெளிச்சம் போட்டுக் காட்டும் கலங்கரை விளக்கம்.

இந்தச் சீதனம் காலத்துக்குக் காலம் உருமாறி பணமாக, பொருளாக, நகையாக, மாற்றமடைந்து தற்போது எதுவுவே வேண்டாமெனக் கூறி (அவசரப்பட வேண்டாம்) சிறிதாக ஒரு வீடு அல்லது காணி, நிலம் இப்படி ஏதாவது இருந்தால் போதும் என்ற பவ்வியமான பேச்சு நம் மத்தியில் உள்ள எத்தனை கன்னிகளின் வாழ்க்கைக்கு கல்லறை கட்டுவிக்கின்றன.

ஏனிந்த அவலம்? காலாகாலம் எழுத்துக்கள் எழுப்பும் வினாதான் இது. இந்நிலை மாறவே மாறாதா? மாறலாம். சீதனம் கேட்கும் பெண் இனமே வாயை மூடவேண்டும். மனமாற்றத்துக்கு உள்ளாக வேண்டும். பெண் எடுப்பவர்கள் விலையை நிர்ணயிக்கிறார்கள். பெண்ணைப் பெற்றவள் பெண்ணை ஏலம் போட்டு ஆணுக்கு விற்கிறார்கள். இதுதான் வாழ்க்கையின் மிகப் பெரிய வியாபாரம். மிச்ச சொச்சம் எல்லாவற்றையும் விற்று மகளுக்காக முதலீடு செய்கிறார்கள். ஆனால் வருவாய் தான் இல்லை. சீதனத்தின் ஆளுமை பெரும்பாலான குடும்பங்கள் கண்ணீர் விடவைக்கின்றது. இளம் கன்னியர்களின் வயது முதுமையை நோக்கி அரங்கேறுகிறது.

வசதிபடைத்தவர்களின் சீதனம் சம்பந்தமான கொடுக்கல், வாங்கல்கள் அவர்களின் ‘டீல்’ வேறுவிதமாக இருக்கும். அந்தஸ்தை உயர்த்திக் காட்டும் விதத்திலும் வியாபார நோக்கிலும் இப்படிப் பல பரிமாற்றங்கள் நடைபெறலாம்.

ஆனால் நடுத்தரவ வர்க்கத்தின் நிலை மிகவும் அபாயகரமானது. மதில் மேல் பூனையாக அவர்களின் வாழ்க்கைத்தரம். அழகிருந்தால் கல்வித்தரம் கேட்கிறார்கள். கல்வித்தரம் இருந்தால் நல்ல அழகான மூக்கும் முழியுமான பெண்ணைக் கேட்கிறார்கள். இரண்டும் இருந்தால் சொந்த வீடு அல்லது காணி… இப்படிக் கேட்கிறார்கள். ஆண் பிள்ளைகளை வைத்திருக்கும் பெரும்பாலானவர்கள் தங்கள் பிள்ளையின் படிப்பு உயர் அந்தஸ்துக்கு ஏற்றமாதிரி சீதனத்தை நிர்ணயிக்கிறார்கள்.

ஆனால் ஆண் குட்டையோ நெட்டையோ கறுப்போ சிவப்போ கல்வி அறிவு குறைந்தவனாக இருந்தாலும் அங்கேயும் ஆண்மகன் என்ற அதிகாரமும் ஆதிக்கமும் தலைதூக்கி நிற்கின்றது. ஆனால், பெண் மாத்திரம் அத்தனை அவதாரங்களையும் எடுத்திருக்க வேண்டும். இதனால் மணமாகாத பல பெண்கள் மணமுடிக்கவே வெளிநாட்டுக்கு உழைக்கப் போகிறார்கள்.

சிலரின் வாதம் இதுதான். வாழ்நாள் முழுவதும் வைத்து உழைத்து குடும்பத்தை சுமப்பவர்களுக்கு சீதனம் கொடுப்பதில் என்ன தவறு என்று கேட்கிறார்கள். குடும்ப பாரத்தை ஆண் மட்டுமல்ல. அதைவிட பலமடங்கு பெண்ணும் சுமக்கிறாள். ஆதனால் தான் பாரபட்சமின்றி அவளை ஒரு தியாகத்தின் மறுவடிவமாக பார்க்கின்றனர். ஆணுக்குப் பெண்ணும் பெண்
ணுக்கு ஆணுமாக படைக்கப்பட்டுள்ள இந்த வையகத்தில் எந்தக் காலகட்டத்திலும் இவர்கள் தனித்து வாழ்ந்திட முடியாது. இறைவனின் நாட்டப்படி ஒருவரை ஒருவர் சார்ந்தே பல தேவைகளும் அபிலாஷைகளும் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் தனித்து நின்று செயற்பட முடியுமென்ற கர்வம் ஆண்களை பிடித்தாட்டுவது அறியாமையும் அறியாமையும் அறிவீனமுமாகும்.

தற்போதுள்ள சீதனப் பிரச்சினையில் ஓரளவு இளைஞர்கள் திருந்தினாலும் பெற்றோரும் உற்றாரும் விடுவதாக இல்லை. திருமணப் பதிவுக்கு முன்னே வீட்டையோ காணியையோ அவர்களது பெயருக்கு எழுதிக் கையெழுத்திட்டால் மாத்திரமே தலையெழுத்து இல்லறத்தில் அமையும்.

ஆனால், ஆண் வயது கடந்து சென்றாலும் இளம் பெண்களை மணம் முடிக்கலாம்.
பொருளாதார பிரச்சினை காரணமாக வயது கடந்த முதிர்கன்னிகள் வீடு வாசல்களை வைத்துக் கொண்டு மணமகனை தேடினாலும் நரை விழுந்த மணமகன் கூட வரம் கொடுப்பது அரிது. என்றாலும் எல்லா ஆண்களையும் குறை சொல்ல முடியாது. சமுதாய சீர்திருத்தம் என்ற பெயருக்கு ஏற்ப வாழ்க்கையை அழகாக அமைத்துக் கொண்டவர்களும் உண்டு. சமுதாய மேம்பாட்டுக்காக உழைப்போம் என்ற பெயரில் பெண் வர்க்கத்தை சுரண்டியவர்களும் உண்டு.

சீதனப் பிரச்சினையால் ஒரு குடும்பத்தில் எத்தனை விதமான பாதிப்புக்கள் ஏற்படுகின்றன. வாயையும் வயிற்றையும் கட்டி சேமிப்பில் ஈடுபட்டு அல்லது கடன் வாங்கி மூத்தவளுக்கு செய்த மாதிரியே இரண்டாம் மகளுக்கும் செய்ய வேண்டிய கடமை அல்லது கட்டாய நிர்ப்பந்தத்தால் அந்தக் குடும்பத்தின் பொருளாதாரம், கல்வி, ஆரோக்கியம் என்பன பாதிப்படைகின்றது.

கடன் சுமை தாங்காமல் நோயில் விழுந்தவர்களும் உண்டு. தற்கொலை செய்தவர்களும் உண்டு. அவரவர் வசதிக்கு ஏற்ப எதையென்றாலும் கொடுக்கட்டும் கடைசி வரை நல்லபடியாக வாழ்ந்தால் போதும் என்று சொல்லும் நல்ல மனம்படைத்த பெற்றோரும் உள்ளனர். நான் சம்பாதித்து வீடு வாசல் வாங்கி நல்லபடியாக வாழவைக்கிறேன் என்று சொல்லும் ஆண்மகன்களும் இல்லாமல் இல்லை.இவர்கள் உண்மையில் வாழ்த்துக்கும் போற்றுதலுக்கும் கௌரவத்துக்கும் உரியவர்கள்.

சமுதாயத்தில் சீதனத்துக்கு எதிரான மறுமலர்ச்சி பத்து சதவீதம் என்றாலும் சீர்கேடுகளும் பிடுங்கித் தின்னும் வர்க்கமுமே 90 சதவீதம் இருக்கின்றன என்பது மட்டும் தான் நிஜத்திலும் நிஜம்


 ‘தொட்டனைத் தூறும் மணற்கோணி போல மாந்தர்க்கு கற்றனைத் தூறும் அறிவு’ என்பதற்கு இணங்க தமிழ் மொழியே தாய்மொழி என்று நின்று விடாது தற்காலத்தில் கட்டாய மொழியாக ஆங்கிலம், சிங்களம் இருந்து வருவதனைக் காணமுடிகின்றது. அவற்றிலும் ஆங்கில மொழியின் முக்கியத்துவம் எவ்வாறு அதிகரித்துச் செல்கிறது என்பதைக் காணலாம். குறிப்பாக கூறுவது என்றால் ஆங்கிலம் தெரியாதவன் அடுத்த ஊருக்குப் செல்ல முடியாத அளவிற்கு ஆங்கிலக் கல்வி முக்கிய இடம் பெறுகின்றது.

கட்டாய மொழியான ஆங்கில மொழியினை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றால் நகரத்துக்கு செல்ல வேண்டும் என்ற நிலையில் தான் இன்றும் சில கிராமங்கள் காணப்படுகின்றது. கிராமப்புற பாடசாலைகளில் இதனை அதிகமாகக் காணமுடியும். பாடசாலைக் காலத்தில் பெறப்படும் ஆங்கில அறிவானது ஒரு கட்டடத்திற்கான அத்திவாரமாகவே அமைந்து விடும். அதாவது ‘ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?’ என்பதற்கு அமைய பாடசாலைக் காலங்களில் அனைவரும் விரும்பியோ விரும்பாமலோ ஆங்கில மொழியினைக் கற்க வேண்டியது அவசியம்.

ஆங்கில மொழி கற்காதவன் பிச்சை எடுக்க கற்றுக் கொள்ள வேண்டும். அதாவது எமது தேவையை பூர்த்தி செய்து வாழ்க்கைப் பாதையில் நகரவேண்டும் என்றால் எவரிடம் இருந்தாவது ஆங்கிலம் என்னும் அறிவை பிச்சை எடுக்கும் நிலையில்தான் வாழ வேண்டும் என்பது உறுதி.

‘அடிமேல் அடிஅடித்தால் அம்மியும் நகரும்’ என்பர். பிறக்கும் போது உடலுடன் உயிர்தான் கூட வருகின்றது. பின்னர் பாடசாலைக் காலத்திலும் பிரதேச விருத்தியிலுமே அறிவு என்னும் விருத்தி பெறப்படுகின்றது. இவற்றின் ஒன்றாகவே ஆங்கில அறிவு விளங்குகின்றது. ஆங்கிலக் கல்வியானது ஆரம்பத்தில் கரும்பு நுனியை சுவைத்தாற் போல காணப்பட்டாலும் பின்னர் கரும்பின் அடிக்கு ஒப்பாகும். இது தனிமனிதன் ஒவ்வொருவரிடமும் காணப்படும் ஓர் உணர்வே…………!


மனிதன் ஒரு சமூகப்பிராணி. ஒரு குழந்தை பிறக்கும் போது சமூகப் பண்புகளுடன் பிறப்பதில்லை. மற்றவர்களோடு தொடர்ந்து தொடர்பு கொள்வதன் மூலமே நற்பண்புகளை பெற்றுக்கொள்கின்றது. குழந்தையின் படிப்படியான வளர்ச்சியில் நற்பண்புகள் வளர்க்கப்பட வேண்டுமாயின் சுமூகமான தொடர்பாடல் அவசியமாகும். சமூகத் தொடர்பாடல் முதிர்ச்சி ஏற்படும் போது தனிநலன்களில் மாற்றம், புதிய நண்பர்களைத் தேடுதல், புதிய சூழ்நிலைகளில் மற்றவர் குணங்களைப் புரிந்து கொள்ளுதல், சவால்களை எதிர்கொள்ளுதல் ஆகிய திறன்களைப் பெற்றுக்கொள்ள முடிகின்றது. தொடர்புகள் பல வகையில் ஏற்படுத்தப்படலாம்.

1. பெற்றோர் - பிள்ளைகள் தொடர்பு
2. ஆசிரியர் - மாணவர் தொடர்பு
3. சகபாடிகள் தொடர்பு
4. பெரியவர்கள் தொடர்பு
5. கற்றவர்கள் தொடர்பு.

இவர்களுடான தொடர்புகள் சமூக விருத்திக்கும் தனியாள் ஆளுமை விருத்திக்கும் அவசியமானதாகும.;

முதலில் தொடர்புகள் ஏற்படுததப்படும் இடம் குடும்பம் ஆகும். குடும்பத்தில் பெற்றோர் பிள்ளைகள் தொடர்பு சீரானதாகவும், மகிழ்ச்சியானதாகவும் அமைதல் அவசியம். பெற்றோர் பிள்ளைகளுக்கிடையில் அத்தகைய தொடர்புகள் ஏற்படாது விட்டால் பிள்ளைகளுக்கு மனமுறிவு ஏற்பட ஏதுவாகின்றது. பிள்ளைகள் பற்றிய அக்கறை ஒவ்வொரு பெற்றோரிடமும் இருத்தல் அவசியம். பிள்ளைகள் முதலில் பெற்றோரிடத்தில் அன்பை எதிர்பார்க்கின்றனர். அவர்களிடமிருந்து நல்ல கண்காணிப்பும் அன்பும் பிள்ளைகளுக்கு கிடைக்குமாயின் அவர்களுக்கிடையிலான உறவு ஆரோக்கியமானதாக அமையும். பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றும் போது ஆலோசனைகளை வழிகாட்டல்களை மேற்கொள்ளும் போது அவர்களுக்கு பாராட்டுக்கள் கவனிப்புக்கள் வழங்கும் போது பெற்றோர் பிள்ளைகள் தொடர்பு அதிகரிக்கின்றது.

“ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது”. சிறுவயதில் நற்பண்புகளைப் பழகாது விட்டால் வளர்ந்தும் கூட அவற்றைப் பெற முடியாது. ஆதலால் பிள்ளைகள் சிறுவயதிலேயே கல்வி ஒழுக்கம், சமூக விழுமியங்களை கடைப்பிடிப்பதில் ஆரடவமும் அக்கறையும் கொள்ள வேண்டுமாயின் பெற்றோர் பிள்ளைகள் தொடர்பு சீரானதாக அமைதல் அவசியம்.

இவர்களுக்கிடையே இத்தகைய சீரான தொடர்புகள் ஏற்படக் கூடிய சந்தர்ப்பங்கள் :
  • தாய் தந்தையரிடையே புரிந்துணர்வு, விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை அன்பு, சகிப்பு தன்மை காணப்படும் போது
  • பெற்றார் சமூகத்தில் நேர்மனப்பாங்குடன் வாழும் போது. 
  • பெற்றார் பிள்ளைகளுக்கு நல்ல நண்பர்களாக இருந்து ஆலோசனைகள் வழங்கும் போது. 
  •  பிள்ளைகளுக்கு ஏற்படும் பிரச்சனைகளை இனங்கண்டு தீர்க்கும் போது. 
  • பிள்ளைகளின் கல்வி, கணிப்பு, அன்பு, பாதுகாப்பு, போன்ற பல்வேறு தேவைகளை நிறைவேற்றும் போது, பெற்றோர்மட்டில் பெற்றோர்மட்டில் பிள்ளைகளுக்கு மதிப்பு ஏற்படுவதுடன் அவர்களுக்கிடையிலான தொடர்புகளும் நல்லமுறையில் அமையும். 

ஆசிரியர் - மாணவர் தொடர்பானது மாணவனிடம் தலைமைத்துவப்பண்பு ஆளுமை விருத்தி, நல்லொழுக்கம், கற்றல் மேம்பாடு ஆகியவற்றை வளர்ப்பதற்கு ஏதுவாகின்றது. ஆசிரியர் மாணவ சமுதாயத்தின் வழிகாட்டிகள். சமூக விழுமியங்களைப் பேணல், நல்லொழுக்கம், கற்றல், தொழில் போன்ற பல்வேறு விடையங்களுக்கு மாணவன் வழிகாட்டப்படுதல் வேண்டும். ஆசிரியரின் வழிகாட்டுதல்களை மாணவன் ஏற்று, அதன்படி செயற்படுவதற்கு ஆசிரியர் - மாணவர் தொடர்பு சிறப்பானதாக அமைய வேண்டும். குருகுலக் கல்விமுறையில் இத்தொடர்பு நல்ல முறையில் பேணப்பட்டு வந்தது. ஒவ்வொரு மாணவனையும் ஆசிரியர் இனங்கண்டு அவனது முன்னேற்றத்திற்கு வழிகாட்டியாக விளங்கினார். அத்தகைய உறவு முறை இன்றும் தொடர வேண்டும்.

பின்வரும் சந்தர்ப்பங்களில் இவர்களுக்கிடையிலான உறவு அதிகரிக்க வாய்ப்பு ஏற்படுகின்றது. 
  • மாணவர் பிரச்சனைகளை ஆசிரியர் இனங்கண்டு பரிகாரம் தேடும் போது.
  • மாணவர்களின் திறமைகளை ஆசிரியர் இனம்கண்டு வளர்க்கும்போது. 
  • மாணவர்களுக்கு பாராட்டு, கணிப்பு வழங்கும் போது. 
  • ஆசிரியர் மாணவனுக்கு நல்ல வழிகாட்டியாக இருக்கும் போது. 
  • மாணவன் பிழைவிடும் போது அவனைத்திருத்தி நல்வழிப்படுத்தும் போது 
  • ஆசிரியர் முகமலர்ச்சி, ஒழுக்கம், நற்பண்புகளுடன் செயற்படும்போது .
  • ஆசிரியரை மாணவன் மதிக்கும் போது ஆசிரியர் - மாணவன் இடைத்தொடர்பு நன்றாக அமையும். 

அடுத்து சகபாடிகளின் தொடர்பு தனியாளின் வளர்ச்சிக்கும் வீழ்ச்சிக்கும் காரணமாக அமைந்து விடகின்றது. நண்பர்களைத் தெரிவுசெய்யும் போது நல்லொழுக்கம் உடையவராகவும், நல்ல வழிகாட்டக் கூடியவராகவும் தெரிவு செய்வது இன்றியமையாதது. நீண்டகால நற்செயல்களின் பின்னணியிலே சமூகத்தில் நற்பெயரைப் பெறமுடியும். ஆனால் கெட்டபெயர் கெட்டபெயர் ஒரு நொடிப் பொழுதில் கிடைத்துவிடும். பல ஆண்டுகாலமாக பேணிக் காத்த நற்பெயரை, நல்லொழுக்கத்தை கெட்ட சகவாசத்தால் நொடிப் பொழுதில் இழந்து விடலாமா? “ஆழமறிந்து காலை விடு” என்பது பழமொழி. அநுபவத்தின் வெளிப்பாடு. ஆகையால் நண்பர்களை ஆராயாமல் அவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்துவது தவறு.

பெரியவர்கள் வாழ்வில் பழுத்த அநுபவசாலிகள். வாழ்க்கையின் மேடுபள்ளங்கள், நெளிவு சுழிவுகள் யாவும் நன்கறிந்தவர்கள். அவர்களுடன் கொள்ளம் தொடர்பானது சமுதாயத்தின் ஏற்றத்திற்கும், சுபீட்ச வாழ்வுக்கும் வழிகாட்டும். பெரியவர்களிடமிருந்து பெறப்பட்ட ஆலோசனைகள், வழிகாட்டுதல்கள் வாழ்க்கையின் இலட்சியத்தை வென்றெடுப்பதற்கு வழிவகுக்கும்.

“கற்றவர்கள் முகத்திரண்டு கண்ணுடையார்” அவர்களின் தொடர்பானது வாழ்க்கையறின் முன்னேற்றப் பாதைக்கு இட்டுச்செல்கின்றது. “பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும்” என்பார்கள். கற்றவர்களோடு சேர்வதால் கல்வியறிவு, நல்லொழுக்கம் இயல்பாகவே பற்றிக் கொள்ளும் என்பது கற்றோர் கருத்தாகும்.

ஆதலால் குழந்தைகள், மாணவர்கள், இளைஞர்கள் என பல தரப்பட்டோரும் வாழ்க்கைக்கு வேண்டிய நல்லனவற்றைப் பெற்று வாழவேண்டும். அதற்கு இடைத்தொடர்புகள் அவசியமாகின்றன. 

Unordered List

Sample Text

Powered by Blogger.

Welcome to ar_talks

Welcome to ar_talks
Welcome

My pics

My pics

Social Icons

Pages

Followers

Featured Posts

Social Icons

Popular Posts

Recent Posts

Text Widget